இதயத்தை ஆளும்
இளைய ராஜா அவர்!
பண்ணைப்புரத்திலுதித்து
பல்லாண்டுகளாய்
பண்ணாளும் பேரரசர்
பின்னணிக்கணி சேர்த்து
பிணிதீர்க்கும் அமுதளித்த
பிதாமகன்-அவர்
இதயமெனும் கோவிலுதித்த
இன்னிசைச் சுடரால்-நம்
இதயம் தீண்டி
பாட்டாலே பக்தியும்
பாவினூடே புத்தியும்
பாங்காயுரைக்கும் பண்பாடகர்
வானொலிக்கும் நல்லிசையால்
வாடாத வான்புகழ்
வாகாகக் கொண்டிட்டார்
பாடல்களின் வாயிலாய்
பார் ஆண்ட
பாட்டரசரே!
மருந்தாய், செவிக்கு விருந்தாய்
மகிழ்வுந்தில் வழித்துணையாய்
மனதில் தங்கிய மெல்லிசை
இசைக்கு இசையும்
இதயங்களை இவர்
இசையால் இசைத்திட்டார்
எழுபதுகளில் தொடங்கி-தன்
எழுபத்தெட்டளவும்
என்றும் ஆள்பவர் அவரே!
தலைமுறைகள் தாண்டி
தன்னிசையால்
தமிழாண்டார்!
தித்திக்கும் தேனிசை
திரையில் தந்து
திங்கள் போலொளிர்ந்தார்!
அன்னக்கிளி முதல்
அன்னமூட்டியதும்
அவரிசையே!
ஆயிரம் படங்கள் -இவ்
ஆற்றல் அரசரின்
ஆக்கத்தால் மின்னின!
அகவை வெறும் எண்ணே
அவரருமை அறிந்த
அன்புள்ளங்களில்
அன்றும் இன்றும் என்றும்
அரியாசனம் வீற்றிருக்கும்
அரசர்- அவரே
இன்னிசை ஈந்து
இளைய நிலவாய்
இனிதே மிளிரும் இளையராஜா!
-பவித்ரா சேஷாத்ரி
Is there someone who is not a fan of the King of Music?! Blessed to be born in his era of music!
(P.S.: My dad is a really big fan of his and I'm so grateful to him for giving me a childhood filled with Raja sir's music!)
Image courtesy: Google Images
Comments
Post a Comment