நீலஉடை மாதவள்தன் நீண்ட கரங்களில்
நீள்இழைகளை ஏந்தி நல்லுயிர்ச்சங்கிலி செய்திட்டாள்
பூரிப்பில் ஆழ்த்துமதை பூமியெனவே விளித்திட்டாள்
புவியதனுள் பிணைத்திட்டாள் பற்பல உயிர்களையும்
பறவைகள் விலங்குகள் பூச்சிகள் தாவரமென
பிணைப்புகள் பலப்பலவாம் பின்னிய சங்கிலியில்
காலம் மாறியதாலது கருத்தது துருவாலே
காற்றில் மண்ணில் கலந்ததாம் மாசதுவும்
மரங்கள் வீழ்த்தி மானிடர் வாழ்ந்தனராம்
புவியதன் மேனியதும் பொலிவிழந்து போனதுவால்
இயற்கையெனும் மாதவளின் இயக்கம்மாறி போயிற்றாம்
மானிடச் செல்வங்கள் மாஇடராய் ஆயினராம்
பூங்காற்றின் மேனியதை பேரிரைச்சல் கிழித்ததுவாம்
சத்தமின்றி சிலஇனங்கள் சிதைந்தும் போயினவாம்
மின்னிய விண்மீன்கள் மின்விளக்கின் ஒளியதனால்
மிளிர்வுதனை இழந்து மிகமங்கிப் போயினவாம்
சீரிய மாதவளும் சீற்றம் கொண்டிட்டாள்
சிறிய மானுடனின் செருக்கதை அழித்திடவே
பஞ்சம் பெருவெள்ளம் படரும் நோய்க்கிருமியென
பலப்பல துன்பங்கள் பெருகின மாந்தருக்கு
தவறுணர்ந்த மானிடரும் தஞ்சம் தேடினராம்
மாதவள் பாதம்வீழ்ந்து மன்னிக்கக் கோரினராம்
"ஒன்றுபட்டு யாவருமிப்புவி ஓங்கச்செய்தல் வேண்டும்
சங்கிலியை சீர்படுத்த சகலரும் முனைதல்வேண்டும்
அங்கமாம் பல்லுயிர்கள் அழியாது நிலைபெறவே
உயிர்கள்யாவும் ஒன்றெனவே உணர்ந்து ஓம்பிடவேண்டும்
இயற்கையெனைக் காத்திடுதல் இன்றியமை யாததன்றோ!"
இவ்வாறு இயம்பிட்டாள் இயற்கையெனும் மாதவளும்
அன்னையவள் வாக்குதனை அடிபணிந்து ஏற்றிட்டு
எந்நாளும் வாழ்ந்திடுவோம் ஏற்றமே கொண்டிடுவோம்!
-பவித்ரா சேஷாத்ரி
Comments
Post a Comment